நடுத்தர வகுப்பினருக்கு, 6 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளதால், கட்டுமான துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், ரொக்க பண பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத பணத்தை பயன்படுத்த முடியாததால், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடு கட்டும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் முடங்கியுள்ளன. அத்துடன் கட்டப்பட்ட வீடுகள் விற்பனையும் மந்தமாக உள்ளது. இந்த பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வீடு கட்ட, ஒன்பது லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 4 சதவீதமும், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அதற்கான வட்டியில், 3 சதவீதமும் விலக்கு அளிக்கப்படும் என, தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு, பொதுத் துறை வங்கிகளில், 10 சதவீதம் வரை, வட்டி வசூலிக்கப் படுகிறது.
பிரதமர் அறிவிப்பின்படி, ஒன்பது லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு, 5 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும்.அதேநேரத்தில், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 6 சதவீத வட்டி கணக்கிடப்படும். இந்த வட்டி விகிதங்கள் அடிப்படையில், அவர்களுக்கான மாத தவணை தொகையும் நிர்ணயிக்கப்படும். இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:பிரதமர் அறிவிப்பால், நகரங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், சிறிய நகரங்கள், புறநகர், ஊரக பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களும் பயன் பெறலாம்.
அடிப்படை வசதிகளுடன் கூடிய, 600 சதுர அடி வீடு போதும் என, கருதும், சாதாரண மக்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். அதேநேரம், கொஞ்சம் நவீன வசதிகளுடன் கூடிய வீடு வாங்குவதானால், அவர்களுக்கு இந்த திட்டத்தின் வரம்புகள், தடை கல்லாக அமையும். சலுகை பெற, ஒன்பது லட்சம்; 12 லட்சம் ரூபாய் என்பதை, 12 லட்சம்; 15 லட்சம் ரூபாய் என, மாற்றினால் அதிகம் பேர் பயன்பெறுவர்
No comments:
Post a Comment