கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி அடைய துவங்கியதால், சுதாரித்துக் கொண்டது அரசு. ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை துவங்கி, அரசுப்பள்ளிகள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் விளைவால், இன்று கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 2012 - 2013ல், ஆங்கில வழிப்பிரிவு துவங்கப்பட்டபோது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வெறும், 107 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2016 -2017 ல், 29 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. 2013 -2014 ல், 248 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்கியபோது, முதல் வகுப்பில், 4,455 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் 101 மாணவர்கள், ஆறாம் வகுப்பில், 298 பேர் என மொத்தம், 4,864 பேர் சேர்ந்தனர். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து 132 ஆக உயர்ந்த எண்ணிக்கை, 2016 -2017 ம் ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 29 ஆயிரத்து 837 மாணவர்களாக உயர்ந்துள்ளது.
'டி.சி.,' கட்டாயமில்லை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், ''மாவட்டத்தில், 611 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் இருந்து, கல்வியாண்டின் நடுவே மாணவர்கள் வந்தாலும், மறுக்காமல் சேர்த்துக் கொள்கிறோம்;'டி.சி.,' கட்டாய மில்லை,'' என்றார். ஆசிரியர்கள் கூறுகையில், 'இன்று அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், 'டெட்' உட்பட, அனைத்து தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்ற, ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.எங்கள் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியுடன், எஸ்.எஸ்.ஏ., அளித்துள்ள செயல்வழி கல்வி அட்டைகள், பயிற்சிகள், கல்வி உபகரணங்களும் சேர்க்கை உயர காரணம். அரசுப்பள்ளிகளில்வழங்கப்படும் விலையில்லா பொருட்களும், தனியார்பள்ளிகளின், கல்விக் கட்டணமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை'என்றனர்.
No comments:
Post a Comment