பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான். ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம்.
1. எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!
மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345, Qwerty போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.
உலகில் அதிகம் பேர் வைக்கும் மோசமான டாப் 10 பாஸ்வேர்டுகள் இவைதான்.
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. 12345
6. 123456789
7. football
8. 1234
9. 1234567
10. baseball
2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:
ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.
3. பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:
ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:
உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.
5. நீளம் மற்றும் தன்மை:
உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.
6. எண் விளையாட்டு:
எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம். குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.
7. கடினமான லாஜிக்:
முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.
- ஞா.சுதாகர்.
No comments:
Post a Comment