புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை : புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு, ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டம், தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்தி, பிரச்னையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளன.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இரு வாரங்களுக்கு முன், போராட்டத்தை துவக்கியது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, 20ம் தேதி, மாவட்ட தலை நகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆலோசனை : தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரும், 25ம் தேதியும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், வரும், 27ம் தேதியும், போராட்டங்களை அறிவித்துள்ளன. பிற ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
பள்ளிகளில், அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இறுதி மற்றும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும், போராட்டத்தில் குதித்துள்ளது, கல்வி அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படி தீர்வு காண்பது என, அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment