நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்த பின்னர் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ என்னும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ், படிப்பில் சேர, ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு மட்டும், ‘நீட்’ தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தனியார் கல்லுாரிகளின்
மருத்துவ மாணவர் சேர்க்கை, ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயே நடந்தது.
வரும் ஆண்டுக்கான, ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு டிசம்பர் முதல் விண்ணப்பங்களைப் பெற, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதனால், இன்னும் இரு வாரங்களில், ‘நீட்’ தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில், மொத்தம் 720 மதிப்பெண்களில், 685 மதிப்பெண் பெற்று குஜராத்தைச் சேர்ந்த ஹேட்சஞ்சய் ஷா என்ற மாணவர் நாட்டிலேயே முதல் இடம் பிடித்தார். ஒடிசாவைச் சேர்ந்த ஏகன்ஷ் கோயல், 682 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த நிகில் பஜியா, 678 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் இடங்களைப் பிடித்தவர்களும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment