கார்டு தேய்க்கும் கருவிகளைப் (POS கருவிகள்) பெறுவது எப்படி
//இந்தியாவில் நகரங்கள், நகர்ப்புற பகுதிகளைவிட கிராமங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இருந்தாலும் கூட, கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் பற்று அட்டை ("டெபிட் கார்டு'), கடன் அட்டை ("கிரெடிட் கார்டு') தேய்க்கும் சிறிய கருவிகள் (பி.ஓ.எஸ். எனப்படும் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகள்) மூலம் பணப் பரிவர்த்தனை 300 மடங்கு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 2012-இல் 7.41 லட்சமாக இருந்த பற்று அல்லது கடன் அட்டை தேய்க்கும் கருவிகளின் எண்ணிக்கை, 2016-இல் 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகளைப் பெற்றுத் தங்களது கடைகளிலும், நிறுவனங்களிலும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் வர்த்தகர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் வங்கிகளில் இப்போது அதிகரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் துறையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்றும் இந்தியன் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்டவை இத்தகைய "பிஓஎஸ்' கருவி வசதியை அளித்து வருகின்றன.
இந்தக் கருவி வசதியைப் பெற குறிப்பிட்ட வங்கியில் நடப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கில் மூன்று மாத சராசரியாக ரூ.5,000 டெபாசிட் தொகையைப் பராமரிக்க வேண்டும். அந்த நிறுவனம் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவி வேண்டும் என்று விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் கடையிலோ அல்லது நிறுவனத்திலோ தரைவழி தொலைபேசி இணைப்புடன் "பி.ஓ.எஸ்.' கருவியை வங்கி நிர்வாகமே இலவசமாக அமைத்துக் கொடுக்கும்.
ஒரு பொருளை வாங்கும் நுகர்வோர், ரொக்கத்துக்கு பதிலாக, அவரது பற்று அட்டையைப் பயன்படுத்தும் வசதியை இந்த "பி.ஓ.எஸ்.' கருவி அளிக்கிறது. இதன் மூலம் நுகர்வோர் - வணிகர் என இருவருக்கும் ஒரே நேரத்தில் பலன் கிடைக்கிறது. மேலும் பற்று அட்டை மூலம் நுகர்வோர் அளித்த தொகை வணிகரின் வங்கிக் கணக்கில் உடனடியாக சேர்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தொகை வந்து சேர்ந்ததற்கு அந்த வங்கியிலிருந்து வணிகரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. மின்னணு முறையில் வணிகத்துக்கான பணப் பரிவர்த்தனைக்கு ஆதாரம் கிடைத்துவிடுகிறது. மாதந்தோறும் வங்கியிலிருந்து வரவு அறிக்கையும் அளிக்கப்படும். மேலும், அன்றாட விற்பனைத் தொகையை கடையில் அல்லது நிறுவனத்தில் ரொக்கமாக வைப்பதால் ஏற்படும் திருட்டு - கொள்ளை தடுக்கப்படுகிறது.//
நன்றி - தினமணி 21.11.2016
No comments:
Post a Comment