அரசூழியர்களை இருபதாண்டுக்காலம் அணுக்கமாக அறிந்தவன் நான். என்று பணிக்கு சேர்கிறார்களோ அன்றோடு அவர்கள் எதையும் கவனிப்பதை, கற்றுக்கொள்வதை முழுமையாகவே விட்டுவிடுவார்கள். மெல்லமெல்ல மூளை அதற்கேற்ப தளர்வடைந்து கற்றுக்கொள்ளவே முடியாமலாகிவிடும். மிகமிகச் சாதாரணமான விஷயங்கள்கூட நினைவில் நிற்காது
நீங்கள் வங்கிகளில் இப்போது பார்ப்பீர்கள். ஒவ்வொரு நாளும் வேலைசெய்யும் கணிப்பொறியையே தொட்டுத்தொட்டு பார்த்துப்பார்த்து டைப் செய்வார்கள் பெண்கள். பக்கத்து ஊழியரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் உலகம் மிகமிகச்சிறிது. திரும்பத்திரும்ப அலுவலக விஷயங்கள், ஊதியப்பிரச்சினைகள் மட்டுமே பேசப்படும். வருடக்கணக்கில் அதையே பேசி அதிலேயே உழன்று அப்படியே அதில் மூழ்கி மறைவார்கள். ஓய்வுபெற்று இருபதாண்டுகளானாலும் அதே அரசூழியர்களாக அதே வேலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்
அன்றாடச்சவால் உள்ள வேலைகள் உண்டு. அவை பெரும்பாலும் சீருடைப்பணிகள். காவல்துறை போல. அங்குள்ளவர்கள் அதற்கான புத்திசாலித்தனத்தை அடைந்திருப்பார்கள். நான் பேசிக்கொண்டிருப்பது வெள்ளைக்காலர் ஊழியர்களைப்பற்றி. அவர்களின் கண்களே ஒருமாதிரி மங்கலடைந்துவிட்டிருப்பதைப் பார்க்கலாம். அறுபது வயதுக்குள் நம்பமுடியாத ஒரு மானசீக முதுமையை அடைந்துவிட்டிருப்பார்கள். அது அவர்களின் விதி. மிகமிகச் சிலரே அதை மீறி முன்னகர முடியும்.
ஏனென்றால் உயிர்கள் வேட்டையாடி வாழப் படைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் வேட்டையாடவும் வேட்டையாடப்படவும் அவர்களின் சூழல் அமைந்தாகவேண்டும். கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு சாகத் தொடங்குகிறது. அரசுப்பணி ஒரு பெரிய கூண்டு
- ஜெயமோகன்
Tuesday, November 15, 2016
அரசுப்பணி-ஜெயமோகன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment