தமிழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு கொண்டு வரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாணவ, மாணவியரின், பெயர், முகவரி மற்றும், 'ஆதார்' எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் விடுபட்டவர்களுக்கான, ஆதார் எண்களை சேர்த்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தர, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, இன்னும் தொலைபேசி வசதி இல்லை; இதில், தொடக்கப் பள்ளிகளின் நிலை மிக மோசம். அதேபோல், இணையதள வசதியும், பல பள்ளிகளில் இல்லை. எனவே, இணையதள மையங்களில், ஆசிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து, எமிஸ் திட்டத்தில், விபரங்களை பதிவு செய்கிறோம். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு, இதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்கள், 'ஆன்லைனில்' திடீரென மாயமாகி விடுகின்றன. அதை தேடி எடுக்க, பல நாட்கள் ஆகின்றன. எனவே, எமிஸ் எண்ணுக்கு பதில், ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment