தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும்.
வேலை செய்த காலத்தை பொறுத்து பென்ஷன் தரப்படுகிறது. பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம். 54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.
இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 55 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வந்தன. தற்போது அனைத்து நிறுவனங்களும் 58 வயதை ஓய்வு வயதாக வைத்துள்ளன. இதனால் ஓய்வு ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னர் அதாவது 57 வயதில் பிஎப் பணத்தை திருப்பிக் கொள்ள புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக இபிஎப்ஒ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல் தொழிலாளர்களின் வைப்பு நிதியை 57 வயது கடந்த பின்னரே எல்ஐசியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.
No comments:
Post a Comment