தமிழக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஆறாவது ஊதியக் குழுவின் அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உள்பட 5-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அறிவிப்புகள் இல்லாவிட்டால் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment