ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஆசிரியர்களின், ௧௫ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்த போராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., ௧௩ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.
ஆனால், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், ஆசிரியர்களை சமாதானப்படுத்த, நேற்று முன்தினம் அரசு தரப்பு பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், போராட்டம் நடத்தும், 'ஜாக்டோ' சங்கம் - புதிதாக உருவாகி உள்ள, 'ஜாக்டா' ஆசிரியர் சங்கம் - அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட, 'டேக்டோ' ஆசிரியர் சங்கம் போன்றவை பங்கேற்றன.அப்போது, சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் சமாதான பதில் அளித்துள்ளனர். இறுதியில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ''அனைத்து கோரிக்கைகளும் செயலர் மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, முதல்வரின் அனுமதியுடன், பிப்., ௧௬ல், சட்டசபையில், பட்ஜெட் உரையின் போது அறிவிப்பாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்துள்ளார்.
மேலும், பேச்சின் போது, 'பிப்., ௧ல் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பாகக் கருதி, சம்பள பிடித்தமின்றி, மாத ஊதியம் தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு, அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment