சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைவதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் அரசின் பதவிக்காலம் முடிவதற்குள், எப்படியாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷனின் பல்வேறு குளறுபடிகள்தான், அரசு ஊழியர்களிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், முழு நேர ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் ஸ்டிரைக்கால் கிராமப்புறங்களில் நுாறு நாள் வேலை திட்டம் தடைபட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் குறைகள் தீர்க்கப்படும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால், ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த அரசு ஊழியர் சங்கங்களையும், முதல்வர் அழைத்து பேசவில்லை. இதே போல், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.8 ஆயிரத்து 500 கோடி குறித்து அரசு எந்த வித பதிலையும் தெரிவிக்கவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: ஆதரவற்றோருக்கு வழங்க கூடிய மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் ரூபாய். அந்தளவிற்கு கூட அரசு ஊழியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுநாள் வரை பணபலன்கள் வழங்கப்படவில்லை. எனவே 20 அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டங்கள் தொடரும், என்றார். ரேஷன் ஊழியர்களும் போராட்டம்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 23 ஆயிரம் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 45 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.
'பணி நிறைவு பெறுவோருக்கு ஓய்வூதியம், கருணைத் தொகை வழங்க வேண்டும்' என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நாளை முதல் போராட்டத்தில் இவர்களும் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மொத்தம் 4,534 தொடக்க வேளாண் கூட்டுறவு ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்,'' என்றார்.
No comments:
Post a Comment