சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்பட 5 சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.பழனியப்பன், தலைமை செயலர் கே.ஞானதேசிகன், நிதித்துறை செயலர் சண்முகம், பணியாளர் சீர்திருத்தத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஒன்றரை மணி வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 1.50 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 8-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அதற்கான அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் மூத்த அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றார்
No comments:
Post a Comment