தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. ஜாக்டோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து அமைச்சர்கள் குழு அண்மையில் பேச்சு நடத்தியது. பிப். 16-ஆம் தேதிக்குப் பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை ஜாக்டோ ஏற்றுக் கொண்டது.
ஆனால், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினருடன் சேர்ந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 17-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். ஜாக்டோ அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, மற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் எஸ்.மோசஸ் கூறியதாவது:-மற்ற சங்கங்களும் எங்களுடன் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வர். வேலைநிறுத்தத்தையொட்டி பல இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றனர் என்றார்.
No comments:
Post a Comment