தமிழகத்தில் தேர்தல் தேதி வருகிற மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக ‘சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வருவார்கள்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்ததாக கூறி 43 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 18 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அட்டை பிரிண்ட் செய்யும் பணி இன்று அல்லது நாளை முடிவடையும். புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள், விலாசம் மாற்றம், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை, தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். வாக்காளர் அட்டை: தற்போது கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களும் இ-சேவை மையங்களில் பணம் கட்டி கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்வதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் புதிய சாப்ட்ேவர் வாங்கியுள்ளது. இதன்மூலம் அவர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும்.
No comments:
Post a Comment