தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதி மற்றும் பிப். 7ம்தேதி சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1.1.2016 தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியல் தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் மாற்ற படிவம் 8ஏ ஆகியவை தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை தவிர அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி ஜன.31, பிப்.7 ஆகிய ஞாயிறு விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஒரே தொகுதிக்குள் மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்பவர்களும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர். இதன் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் இவர்கள் ஓட்டு போடலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment