கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுக் கூட்டம் சென்னை ரிசர்வ் வங்கியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன், துணை ஆளுநர்கள் ஆர்.காந்தி, எச்.ஆர்.கான், எஸ்.எஸ்.முந்த்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் கூறியதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, முக்கிய நகரங்களில் அதிகாரிகளின் குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறது.
இதில் பொருளாதாரம், மூலதன முதலீடு, எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தம் தேவை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள் நாட்டு முதலீடு அதிகரிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். பண வீக்கம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, வங்கிகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு பருவமழை சராசரி அளவுக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை வழக்கமான அளவுக்கு பருவமழை பெய்துள்ளது. எனினும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து, பருவ மழையின் அளவை பொருத்துதான் வட்டி விகிதம் குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்தியாவுக்குப் பாதிப்பு இல்லை: மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில், ரிசர்வ் வங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவுக்கு நேரடியாக எந்தவிதப் பாதிப்பும் இருக்காது.
இருப்பினும், மறைமுக பாதிப்புகள் அதிகம் இருக்கும். அதாவது, அந்நிய செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றமே இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பண மதிப்பானது, ஐரோப்பிய நாட்டு பணத்துடன் ஒப்பிடும் போது, ஏற்றம், இறக்கமாகவே உள்ளது. நாட்டின் பண மதிப்பு ஏற்றம், இறக்கமாக இருக்கக் கூடாது. இந்தியர்கள் அனைவரையும், வங்கி சேவை போன்ற நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக, ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. குழுவில் வல்லுநர்கள்,அரசு பிரதிநிதிகள் இடம் பெறுவர். இந்தக் குழுவானது, அடுத்த 5 ஆண்டுக்குள் மக்களை எப்படி நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவது என்பது குறித்து வரைவு திட்டம் தயாரித்து அளிக்கும். தனி விதிமுறை:
வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் தனியாக விதிமுறை ஒன்று கொண்டு வரப்படும். அதேபோல் மத்திய அரசு, மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, செல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் வங்கி சேவையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சோதனை முயற்சியாக, நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. நிகழாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார் ரகுராம் ஜி.ராஜன்.
No comments:
Post a Comment