மத்திய அரசு அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்குவதில், இரண்டாவது ஆண்டாக சிக்கல் நீடிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் என்ற, உலக வரைபட புத்தகம், அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். ஆனால், கடந்த கல்வியாண்டு முதல், அரசு சார்பில், அட்லஸ் புத்தகம் வழங்குவதை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அட்லஸ் வரைபடப் புத்தகம் அச்சடிக்க, மத்திய அரசின், 'சர்வே ஆப் இந்தியா' அமைப்பின் அனுமதி வேண்டும். அதிகாரபூர்வ வரைபடத்தை, அந்த அமைப்பில் பெற்ற பின்னரே, அச்சடித்து வழங்க முடியும்.கடந்த ஆண்டு, ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவாக்கப்பட்டதால், வரைபடத்தில் திருத்தம் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.
அதேபோல், சீன எல்லைப் பகுதியிலுள்ள சில இடங்கள் குறித்தும், தெளிவான படங்கள் உருவாக்கப்படுவதால், புதிய வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் படங்களையும், திருத்தப்பட்ட மாநில வரைபடங்களையும் அதிகாரபூர்வமாக வழங்கி, அனுமதி அளித்தால் தான், புதிய புத்தகம் தயாரிக்க முடியும். எனவே, அனுமதிக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment