விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.
முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் கட்டுக் காப்பு மைய பொறுப்பாளர்கள், விடைத்தாள்களை சரிபார்த்தனர். பின், 18ம் தேதி முதல், தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. சென்னையில், நான்கு மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 73 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
இதில், மொழிப் பாடங்களுக்கு பல மையங்களில் திருத்தும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் முதற்கட்ட பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இன்று முதல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் புவியியல் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
இந்தப் பணிகளுக்கு வரும் ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். ஊதியம் குறைவாக இருப்பதாகவும், தனியார் பள்ளிகளில், பிளஸ் 2வுக்கு பாடம் எடுத்து வரும் நிலையிலும், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த முன்வரவில்லை.
விடைத்தாள் திருத்த வராதவர்கள் மீது, கல்வித்துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; மற்ற மாவட்டங்களுக்கு விடைத்தாள் திருத்தும் மைய உதவியாளராக செல்ல வேண்டிய நிலை வரும் என்று, தேர்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment