10லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குரூப்-4 தேர்வு முடிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வெளிவரும் என்று நன்றாக தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். எனவே இந்த தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்வு வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து வருகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு இன்னும் 1 மாதத்திற்குள் வெளியிடப்படும். உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை உள்ளிட்ட 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் தேர்வு நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.
புதிய குரூப்-1 தேர்வு
புதிதாக குரூப்-1 தேர்வு அறிவிப்பு வர உள்ளது. அந்த தேர்வில் , துணை கலெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள், வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கான 47 பணியிடங்களுக்கு அறிவிப்பு அடுத்த (ஏப்ரல்) மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
அது மட்டுமல்ல புதிதாக நிறைய இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-4 தேர்வுக்கான அறி விப்பு, ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
செயல்நிலை அதிகாரி கிரேடு-1 பதவிக்கு தேர்வு நடத்தப்பட்டு 2 மாதத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. டிராப்ட்ஸ் மேன் தேர்வு நடத்தி இறுதி முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இதுபோல மனோதத்துவர், உதவி மருத்துவ அதிகாரிகள் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடத்தி விரைவாக முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.
கிராம நிர்வாக அலுவலர்
அதுபோல என்ஜினீயர்கள், அரசு உதவி பொது வக்கீல்கள், அறிவியல் உதவியாளர், குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடத்தி விரைவாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. நிறைய பேர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்காக தேர்வு நடத்தி முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதுபோல சிவில் நீதிபதிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படி அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் எவ்வளவு விரைவாக முடிவை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்கி வருகிறோம்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment