தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 16,549 பேர் கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வு மூலம் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டித் தேர்வில் கேள்விகள் சரியாக இல்லை எனக் கூறி அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக் கணினி, புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் போன்ற பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்; அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment