4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஸ்மார்ட் கார்டு திட்டம்: ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளி கல்வித்துறையால், மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை.
இத்திட்டத்திற்காக, பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்த கல்வித்துறை, எவ்வித தகவல்களையும் தரவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2010-11ம் கல்வியாண்டு முதல், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பிரத்யேக இணையதளம் அமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும், திட்டம் வகுக்கப்பட்டது.
பள்ளிகளிலிருந்து, மாணவர்களின் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர், ரத்த பிரிவு, படிக்கும் வகுப்பு, பள்ளி, சமூக நிலை, உயரம், எடை, ஆதார் பதிவு எண் உட்பட தினந்தோறும், பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்தது. ஸ்மார்ட் கார்டில், 16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட மாணவர்களின் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் கார்டு, 2011-12ம் கல்வியாண்டில், மாநிலம் முழுவதுமுள்ள, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் 1.34 கோடி மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படும் என அறிவித்தது.
வங்கி ஏ.டி.எம்., அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில், தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்; மாணவர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, பின், வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு, இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் தவிர்க்கப்படும். தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.
இ.எம்.ஐ.எஸ்., இணையதளம் வாயிலாக, இதற்கான பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததாக அறிவித்த நிலையிலும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகிக்காமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுறது. அறிவித்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றும், எவ்வித முன்னேற்றமும் இன்றி உள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு, புள்ளி விபரங்களை அனுப்பியே, நாங்கள் சோர்வடைந்து விட்டோம். இத்திட்டத்தை செயல்படுத்தினால், பல்வேறு பணிச் சுமைகள் குறைக்கப்படும். திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்தவா அல்லது ஆசிரியர்களை வாட்டுவதற்காகவா என்பது புரியவில்லை" என்றார்.
No comments:
Post a Comment