ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-2011 ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2010-2011 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு அலுவலக செயல்முறைகள் (எண்.102882, சி5, இ2, 2010) மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனங்கள் அனைத்தும் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனங்களாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆசிரியர்கள் சார்பில் தகுதிகாண் பருவம் முடிந்தமைக்கான உத்தரவு வழங்கும் முன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சான்றினை முன்னிலைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரியும், பள்ளியின் தலைமையாசிரியர் மேற்கொள்ள, முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும். இச்செயல்முறைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்கள் மூலம் அனுப்பி வைக்கவும், பணிப் பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment