வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றி, புதிய புகைப்படத்தைச் சேர்க்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிக்காக, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், 'இ - மெயில்' முகவரி உள்ளிட்டவற்றை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கடந்த, 25ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர். 'பழைய கருப்பு வெள்ளை அடையாள அட்டையில் உள்ள தங்களது புகைப்படம் தெளிவாக இல்லை; அட்டையும் சேதமடைந்துள்ளது.
அதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாக்காளர்கள் தரப்பில், தேர்தல் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு, தற்போது தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டையில் உள்ள, தங்களது பழைய புகைப்படத்தை மாற்ற, படிவம் 8யை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, புதிய கலர் படத்தை, அதனுடன் இணைக்க வேண்டும்.
இப்பணிகள் முடிந்து, ஜூலையில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில், புதிய புகைப்படம் இடம் பெறும். முதற்கட்டமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, புதிய, 'சிலிப்' வழங்கப்பட்டு, புதிய அடையாள அட்டை பின்னர் தரப்படும். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், இல்லாத வாக்காளர்களின் விவரங்கள், தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment