ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை வெளியீடு; இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம்; ஆசிரியர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக, கடந்த 12 ஆண்டு களுக்கு பின், 29 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மார்ச் 8ல், தமிழகம் முழுவதும் பேரணி நடத்தியது. தொடர்ந்து, ஏப்., 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக் குழுவில், மேலும், 10 ஆசிரியர் சங்கங்கள் இணைய முன்வந்துள்ளன. இதற்கான இணைப்பு மற்றும் அடுத்தகட்ட போராட்டம் குறித்த, ஜாக்டோ குழு ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி, தமிழ்வாணன் கூறுகை யில்,
''ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம், சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க அலுவலகத்தில் நடக்கிறது. பல புதிய சங்கங்கள் ஜாக்டோவில் இணைப்பது; ஏப்., 19ம் தேதி, உண்ணாவிரதத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி வெற்றி பெற வைப்பது குறித்தும், உயர்மட்டக் குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்,'' என்றார்.ஜாக்டோ போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்படாமல் சமாளிக்க, கடந்த பிப்ரவரியில், ஜாக்டோ குழுவினர் முதல்வர் சந்திக்க, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஜாக்டோ குழுவினர் தலைமைச் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு, பின், நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.முதல்வர் தங்களை சந்திக்காத நிலையில், மீண்டும் ஜாக்டோ குழுவை, அரசே அழைக்க வைக்கும் வகையில்,போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, இன்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக, ஜாக்டோ வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment