தமிழக அரசின் 2015-16-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 20,936.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ. 2,090.09 கோடியும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ. 816.19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக, 2010-11-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் 29 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தது, 2014-15-ஆம் ஆண்டில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் குறைந்துள்ளது.
இதுபோல உயர்நிலைப் பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தது. இப்போது 22 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
மேலும், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 88.59 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,429.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 73 கோடியே 52 லட்சம் செலவில் மாணவ, மாணவிகளுக்கென தனித் தனியாக 11,698 கழிப்பறைகள் கட்டப்பட்டன.
மேலும், பயன்படுத்தாமல் இருந்த 10 ஆயிரத்து 776 கழிப்பறைகள் ரூ. 41 கோடியே 67 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனி கழிப்பறை வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோல 2015-16 நிதியாண்டில் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் ரூ. 450 கோடியே 96 லட்சம் செலவில் பள்ளி கட்டமைப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தலா 4 சீருடைகள், புத்தகப் பைகள், நோட்டு புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், கிரயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் காலணிகள் உள்ளிட்டவை வழங்குவதற்காக 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,037 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா சைக்கிள்கள் வழங்க ரூ. 219 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக 2011-12-ஆம் ஆண்டில் 90.28 சதவீதமாக இருந்த உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 2013-14-ஆம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 75.87 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2015-16-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ. 20,936.50 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 2,090.09 கோடியும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ. 816.19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment