பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.
அக்டோபர் 15-ஆம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் என்பது, இப்போதுள்ள வாக்காளர் பட்டியலை அப்படியே வெளியிடுவதாகும். அந்தப் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ளலாம். நவம்பர் முதல் வாரம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள்: 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள், சுருக்க முறை திருத்தத்தின்போது தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ஆம் தேதியன்று புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் பணி: மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளன. இதனால், சுருக்க முறை திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்காது என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட வேண்டுமெனில், அது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment