டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், பள்ளி தலைமையாசிரியை பிரமிளா, அறிவியல் ஆசிரியர் சுந்தரம் ஆகியோரின் வழி காட்டுதலுடன், டில்லியில் நேற்று நடந்த '4வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி 2014' போட்டியில் தென் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
தற்போது டில்லியில் உள்ள மாணவனின் வழிகாட்டியான ஆசிரியர் சுந்தரம் 'நமது நிருபரிடம்' தொலைபேசியின் மூலம் கூறியதாவது: மாணவன் கோகுல், வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். வாகன ஓட்டிகள், 2 வினாடி கண் அயர்ந்து துாங்கிவிட்டால், சென்சார் தொழில்நுட்பத்தில், அவரது இருக்கை அதிர்ந்து, அவரது துாக்கத்கை கலைத்து விடும்.வேகத்தடையால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க, ரேடியோ அலைவரிசை மூலம், வேகத்தடை வருவதற்கு, 10 அடிக்கு முன்பே, டிரைவரை 'அலர்ட்' செய்யும் தொழில்நுட்பம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க 'ஆல்கஹால் சென்சார்', மொபைல் போன் சென்சார் தொழில்நுட்பங்களும், இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த படைப்புக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி என, 6 மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மாநில அளவில், 2ம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் கோகுலின் அம்மாவின் பெயர் தங்கமணி, தந்தை மணி, காபி துாள் கடையில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment