ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று, 2011-ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு, நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், 2010-11-ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி (தமிழ்) ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணைகள் வழங்கப்பட்டாலும், நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட 23.08.2010-ஆம் தேதிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, அந்தத் தேதிக்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்களில், ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அவர்களுக்கு தகுதிகாண் பருவத்தை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதுமின்றி செயல்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment