பள்ளிப் படிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் 8-ஆம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் படிப்பு உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும்.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு வரும் 12-ஆம் தேதி கீழ்க்கண்ட தேர்வு மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 337 பேர், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 332 பேர், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 பேர், உடுமலை எஸ்.வி.ஜி. மேல்நிலைப் பள்ளியில் 422 பேர், தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 260 பேர், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 127 பேர் என மொத்தம் 1,657 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment