தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்ப்பு உள்பட தேவையான விளக்கங்களைப் பெற இலவசத் தொலைபேசி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். வரும் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். நவம்பர் 10-ஆம் தேதி வரை பெயர்களைச் சேர்க்க விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா, முகவரிகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பன போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இதனிடையே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் போது ஏற்படும் சந்தேகங்கள், போதிய விளக்கங்களைப் பெற தேர்தல் ஆணையத்தின் சார்பில் இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் தனியான தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தத் தொலைபேசி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான தகவல்களைப் பெறலாம்.
தொலைபேசி எண் 1950. எஸ்.எம்.எஸ். வசதி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, எந்த வாக்குச் சாவடியில் பெயர் உள்ளது என்பதை செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் தங்களது செல்போன் மூலம் 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அவர்களது பெயர் எந்த வாக்குச் சாவடியில் இருக்கிறது என்பது குறித்த தகவல் அனுப்பப்படும். இந்த வசதி வரும் 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. உதாரணமாக, ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், டி.என்.ஏ.1234567 என்று இருந்தால், அவர் தனது செல்போனில் உடஐஇ பசஅ1234567 என்ற முறையில் டைப் செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும் என பிரவீண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment