கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் துவங்கி, தென் மாவட்டங்கள் வரை, பரவலாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக மழை, கொட்டி வருகிறது. இதனால், கடந்த வாரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திண்டுக்கல் உட்பட, பல மாவட்டங்களில், தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நாட்களை ஈடுகட்ட, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை யின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்களும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஆண்டுக்கு, 210 நாட்களும், வேலை நாட்களாக உள்ளன.
பருவ மழை காலத்தில், இதுபோன்று, பள்ளிகளுக்கு, அவ்வப்போது விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்த முறையும், அதிக நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. எத்தனை நாட்கள் இழப்பு ஏற்பட்டதோ, அத்தனை நாள், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்தி, கற்பித்தல் பணி, ஈடுகட்டப்படும். இது தொடர்பாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்ய, கல்வித்துறை அனுமதித்துள்ளது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment