வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துவதை விட, அரசு மேல்நிலை பள்ளிகளே இல்லாத இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அருகருகில் மேல்நிலை பள்ளிகள் இருந்து பங்கு தொகை கட்டியிருந்தாலும் அந்த பகுதியில் புதிதாக ஒரு அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ. தூரத்திற்குள் ஒரு மேல்நிலை பள்ளி இருக்க வேண்டும் என்று அரசாணை உள்ள நிலையில், அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருப்பின் அதன் அருகில் மற்றொரு உயர்நிலை பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பள்ளிகள் தரம் உயர்வதற்காக பொதுமக்களால் பங்குத்தொகை செலுத்தப்பட்டு இதுவரை தரம் உயர்த்தப்படாத பள்ளிகளின் விவரங்களை பட்டியலிட்டு அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகள் பட்டியல், முன்னுரிமை பட்டியல் விபரங்களை மாவட்ட வாரியாக தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment