தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) நிதி வழங்க உள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 25 சதவீத மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த 2013-14 ஆம் கல்வியாண்டில் மட்டும் 21 ஆயிரத்துக்கும் அதிமான மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், இந்த மாணவர்களுக்கான கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்க வேண்டிய கட்டணத் தொகையாக கடந்த ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகை மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டது. ஆனால், இந்தத் தொகையை மாநில அரசுதான் தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டும் என மத்திய அரசு கூறிவந்தது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் கட்டணத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, நடப்பாண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கமாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசே ரூ.25 கோடியை தனியார் பள்ளிகளுக்கு மூன்று மாதங்களில் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதி மூலமாக மத்திய அரசு வழங்கும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் அனைவருக்கும் கல்வித் திட்ட நிதி மூலமாக வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு 65 சதவீதம், மாநில அரசு 35 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்படும். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்தத் தொகையை புதிய அரசு பொறுப்பேற்றதும் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment