தற்போதைய நிலையில் ஏடிஎம் கார்டு முதல் ரேஷன் கார்டு வரை எந்த கார்டிலும் தில்லுமுல்லு இல்லாமல் இருப்பதில்லை. ஏடிஎம் கார்டின் மூலம் அதன் பின் நம்பர் தெரிந்தால் போதும், கார்டை போட்டு யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால் முற்றிலும் பயோமெட்ரிக் முறையிலான புதிய "ப்ரீபெய்டு கார்டு" என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ரிசர்வ் வங்கி.
இதில் நமது கைரேகை இருக்கும் என்பதால் இந்தக் கார்டை உரியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால் முறைகேடுகள், மோசடிகள் நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
பயோமெட்ரிக் முறை:
இந்த கார்டைப் பயன்படுத்துவோர், தங்களது ரேகையை சம்பந்தப்பட்ட மெஷினில் வைத்தால்தான் பணம் கிடைக்கும். எனவே உரியவர் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
கைரேகை கஷ்டம்:
ஆனால் கைரேகை பதிவுக்கு குறைந்தபட்சம் 20 வினாடி எடுப்பதாலும் நாடு முழுக்க எல்லா இடங்களிலும் கைரேகை பதிவுடன் கூடிய மெஷின்களை வைப்பது சாத்தியமில்லை என்பதாலும் வங்கிகள் தயங்கி வருகின்றன.
பணம் எடுக்க வழி:
தற்போது ப்ரீபெய்டு இ - வேலட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங், இ-டிக்கட் எடுப்பது, கட்டணங்கள் வரிகளை செலுத்துவது போன்றவற்றுக்கு வசதியை சில தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன. இந்த கார்டுகள் மூலம் பணம் எடுக்கவும் வழி செய்ய வேண்டும் என்று இவை கோரி வந்தன.
ஸ்மார்ட் கார்டு வசதி:
ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு மறுத்து வந்தது. இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையில் பணம் எடுக்க பயன்படும் வகையில் ஸ்மார்ட் கார்டு வசதியைஅறிமுகம் செய்ய இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.
கார்டு மட்டும் போதும்:
அதாவது, ஸ்மார்ட் கார்டிலேயே கைரேகை பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேறு வகையில் கைரேகை பதிவு தேவை இல்லை. கார்டு மட்டுமே போதும். பதிவு பெற்ற கைரேகையை தங்களிடம் இருக்கும் மெஷினில் ஒப்பிட்டு கடைகளே பணம் அளிக்க முடியும்.
தில்லுமுல்லு குறையும்:
இந்த முறையில் தில்லுமுல்லு வெகுவாக குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வந்தால் எதிர்காலத்தில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள் எல்லாம்கைரேகை பதிவில்லாமல் பயன்படாத நிலை ஏற்படும்.
வர்த்தகத்துக்கான லைசன்ஸ் :
தற்போது ப்ரீபெய்டு மற்றும் இ -வேலட் கார்டுகளை வெளியிட்டு ஏர்டெல் மணி உட்பட சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு இந்த புதிய ஸ்மார்ட் கார்டு வெளியிடும் வர்த்தகத்துக்கான லைசன்ஸ் தரப்படலாம்.
கைரேகை மூலம் பணம்:
இந்த ஸ்மார்ட் கார்டு அமலுக்கு வந்தால் ஏடிஎம் மையத்துக்கு போக வேண்டாம். லைசன்ஸ் உள்ள கடைகளில் கூட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணம் பெற முடியும்.
No comments:
Post a Comment