வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களாக பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார் எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டாரக் கிளைத் தலைவர் மணிகண்ட பிரபு, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் 180 பள்ளிகளில் 1,200 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், மக்களவைத் தேர்தலுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 11 முதல் 24-ஆம் தேதி வரை 14 நாள்களாக வீடுதோறும் பூத்சிலிப் விநியோகம் செய்தனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பணியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றுவதற்காக தபால் வாக்குச்சீட்டு (போஸ்டல் ஓட்டு) இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், தேர்தல் தினத்தில் வழங்கப்படவேண்டிய மதிப்பூதியமும் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் அதிருப்தியை தெரிவித்துகொள்கிறது என்று தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தினமான வரும் 16-ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குப் பதிவு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment