ஏழ்மை படிப்புக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் மத்திய அரசு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு அடிஎடுத்து வைக்கும் ஏழை மாணவ&மாணவிகளுக்கு கல்விக்கடன் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்கள் கல்விக்கடனால் பெருமளவு பயன் அடைந்து வருகிறார்கள். கல்விக்கடனின் சிறப்பு என்னவென்றால் மற்ற வங்கிக்கடன்களைக் காட்டிலும் கல்விக்கடனுக்கு வட்டி மிகவும் குறைவு. படித்துக்கொண்டிருக்கும்போது வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். கடன்தொகையை படித்து முடித்து பின்னர் கட்டினால் போதும். உள்நாட்டில் படிக்கவும், வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கவும் கல்விக்கடன் பெறலாம்.
தற்போது அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்த நிலையில், அரசு ஒதுக்கீடோ, நிர்வாக ஒதுக்கீடோ எந்த பிரிவின் கீழ் சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டுவிடக்கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உத்தரவு பிறப்பித்தார். இதன் எதிரொலியாக, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும் வகையில் தற்போதைய கடன் நடைமுறைகளை திருத்தி அமைத்து வருகிறது. மேலும், புதிய முறையின்கீழ், தற்போதைய வங்கிக்கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, உள்நாட்டில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும் கடன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு 3-வது நபர் ஜாமீனோ, உத்தரவாதமோ வங்கிக்கடன் கேட்கக்கூடாது.
அதோடு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களாக இருந்தால் ரூ.7.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்தொகைக்கும் ஜாமீன் உத்தரவாதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்தால் ரூ.45 ஆயிரத்து 787 கோடி அளவுக்கு கல்விக்கடன் நிலுவையில் இருந்து வருகிறது. 23 லட்சம் பேரிடமிருந்து இந்த நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு தொடங்க உத்தேசித்துள்ள கடன் உத்தரவாத நிதி கல்வி அறக்கட்டளை மூலம் வங்கிகளுக்கு நிலுவைத்தொகை சுமை குறையும். காரணம், கல்விக்கடன் நிலுவை ஏற்பட்டால் அதில் 75 சதவீத தொகையை இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட வங்கிக்கு வழங்கிவிடும். நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டத்தோடு கல்விக்கடனை திருப்பிச்செலுத்தும் காலத்தையும் நீட்டிக்குமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தற்போது கல்விக்கடன் பெற்று படித்து முடித்து வேலையில் சேரும் பட்டதாரிகள் 7 ஆண்டுகளில் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும். ஆனால், புதியமுறையின்படி, கடன்தொகைக்கு ஏற்ப 10 ஆண்டுகளிலோ அல்லது 15 ஆண்டுகளிலோ கடனை திருப்பிச்செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment