அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கூட இல்லை. கற்காலத்தில் இருக்கிறீர்களா என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் 2014ல் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள தகவல்படி 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை. 15.45 சதவீத அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. 2,080 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர்கள் குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தஞ்சை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட கிராமப்பகுதிகளிலுள்ள 34 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் வசதி இல்லை. துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை. பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் செலுத்தும் நிலை உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் கிடைப்பதில்லை. தரமான நாப்கின்கள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கு பலர் பயன்படுத்துகின்றனர். பள்ளி பொருட்கள் திருடு போகும் நிலை உள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘பொதுவாக குறைந்தபட்ச கூலியாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளருக்கு மாதம் ரூ.1,200 கொடுத்தால் எப்படி வேலைக்கு வருவார்கள். இன்னும் கற்காலத்திலேயே உள்ளீர்கள். நாடு சுதந்திரம் அடைந்து 70வது ஆண்டில் இருக்கிறோம். ஆனால் இன்னும் கழிப்பறை வசதி கூட கிடைக்கவில்லை. 3 மாவட்டங்களிலேயே இந்த நிலை என்றால், தமிழகம் முழுவதும் இப்படித்தானே இருக்கும்? கட்டிடத்தை கட்டினால் மட்டும் போதுமா, யார் பராமரிப்பது? இதற்கென ஆட்கள் வேண்டாமா? தண்ணீர் வசதி செய்து தரக்கூடாதா? உள்ளாட்சி அமைப்பிலிருந்து தண்ணீர் வசதி பெறலாமே. அரசு பள்ளிகளில் மின்சார பயன்பாடு மிகவும் குறைவுதான். மின்விசிறி, ஏசி போன்ற வசதிகள் இல்லை. ஆய்வகம் மற்றும் மின் மோட்டார் உள்ள பள்ளிகளில் மட்டுமே குறைந்தளவு மின்சாரம் பயன்படுகிறது. ஏன் அரசு பள்ளிகளுக்கு அரசின் சார்பில் இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. எந்த வசதியும் இல்லாமல் எப்படி தரமான கல்வி வழங்க முடியும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஏன் பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராகி விளக்கமளிக்க கூடாது என சரமாரி கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து விளக்கம் கேட்டு தெரிவிக்கப்படும்’ என்றார். இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு காலத்தில் பணிகள் நிறைவேற்றப்படும். உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிகல்வித்துறை செயலரின் சார்பில் திட்டவட்டமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 8க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment