'ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து, உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது.
புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன. 'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும்.
பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம்.
No comments:
Post a Comment