வாட்ஸ் அப்பில் நடந்து கொள்வது எப்படி?நடக்காதது எப்படி?
இன்றைய இளைஞர்கள் கூடு கட்டி வாழும் கலைக்கூடம் இணையம்.முகநூல்,ட்விட்டர் அனைத்தும் கடந்து போகும்.ஆனால் வாட்ஸ் அப்பை படித்தாலோ,பார்த்தாலோ மட்டும்தான் கடந்து போகும்.அப்பிடிப்பட்ட வாட்ஸ் அப்பில் நாள்தோறும் வற்றாத ஜீவநதியாய் பெருகிடும் தகவல்கள் பல.தனிமரம் தோப்பாகாது.ஆனால் குரூப்பில் சேர்த்து குதூகலிக்கும் நட்புகள் அதிகம்..
வாட்ஸ் அப்பில் நடந்து கொள்வது எப்படி?
இதுதான்
புதுசா குரூப்பில் சேரும்போது இப்பிடி சொல்லித்தான் சூடம் காட்டுவாங்க..
அப்புறம் போகப்போக ஏழ்ரை டன் வெயிட்டோட அடி விழும்..
#விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது.இதை கார்ல்மார்க்ஸ்,அப்துல்கலாம்,நம்மாழ்வார் பிறந்தநாளுக்கு அவர்கள்.சொன்னதாக பதிவிடுவாங்க..அப்பவே தெரிஞ்சிடும் நாலு பேரும் நல்லா இருந்த வாட்ஸ் அப்பும் டைட்டில் வச்சிக்கலாம்
#தப்பித்தவறி விடுமுறை நாள் வந்துட்டா ஓயாம உடுக்கை அடிச்ச வண்ணம் நோட்டிபிகேசன் ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.வெளிமாநில டூர் அடிச்சி அத்தனை போட்டோவையும் அப்லோடுவாங்க.. அதுவும் கூலிங்கிளாஸ் போட்டு ஆனந்ததொல்லை பவர் ஸ்டாருக்கே 'டப்' கொடுக்கும் விதமா..
இதுல பத்து பேர் நிற்க தோதான இடம் கிடச்சா எடுற செல்ப்பி னு எடுத்து அவங்க பாப்பாங்களோ இல்லையோ நமக்கு முதல்ல காட்டிருவாங்க
(இதில செல்ப்பி கிளிக்கி முதலில் யார் இருக்கிறாரோ அவர் அழகாய் இருந்தால் மட்டும் அப்லோடுவார்.பக்கத்திலிருப்பவர் கண் மூடி இருப்பது,அஞ்சாவது இருப்பவர் வேறிடத்தில் பார்ப்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டார்.
#பட்ட காலிலே படும்,கெட்ட குடியே கெடும்கிற மாதிரி போட்ட நியூசை போட்டு தாளிப்பாங்க.அவரவர் எப்போது நெட் ஆன் செய்கிறாரோ அப்போதுதான் அவருக்கு அது ப்ளாஸ் நியூஷ்.அது எப்போது வந்திருந்தாலும் சரி
#கொஞ்சம் குட்டிக்கதைனு சொல்லிட்டு வெண்முரசு லெவல்ல நீளக்கதை ஒன்று வரும்.ஸ்க்ரால் செய்து கட்டை விரலே குட்டி ஆனாலும் அந்தகதை கூட்ஸ்வண்டி மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும்.கதையின் கடைசி வரியில் கண்டிப்பா நீதி இருக்கும்.அதை படிச்சிட்டு திருந்துவாங்க னு நினைப்பில தாதுமணலை அள்ளிப்போடணும்.
#சில பேரு மாசக்கணக்கில நெட் கார்டு போடாம ஒரு நாள் நெட் ஆன் பன்னி..ஒரு மாசம் கழிச்சி படிச்ச அத்தனை பதிப்பையும் இந்தியா ஏழை நாடுன்னு யாரு சொன்னாங்க அறிவு னு அத்தனைசெய்தியையும் படியும் படித்துத் தொலையுங்கிற ரேஞ்சில பதிவிடுவாங்க
#இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டு மணியிலிருந்து விடியற்காலையில் சூரிய புயல ஒன்னு வருது.இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் செல்போன் சேதாரமாகும்.ஒரு சில இடங்களில் ஆன்ட்ராய்டு போனை தாக்கும் என எச்சரிக்கை அடிப்பாங்க.கடலுக்கு செல்லாத மீனவர்கள் மாதிரி தனியா வச்சிட்டு வந்து படுக்க வச்சிருவாங்க
#வேலைக்கு சென்ற இடத்தில் மதிய உணவு இடைவேளையில் நெட் ஆன் பன்னினால் நெஞ்சடைக்கிற மாதிரி 4200 நோட்டிபிகேசன் காண்பிக்கும்.எடுத்துபார்த்தால் மூன்றே பேர் உரையாடியிருப்பாங்க.உங்களையெல்லாம் அந்த ஆபிஸ் ஹெச்.ஆர் தான் தண்டிப்பாரு
#ராபின் சர்மா எழுதிய who cry you wil die ஒரு புத்தக விமர்சனம்.எனக்கு தெரிஞ்சு ராபின் சர்மாவை விட நாங்கதான் அதிகம் படிச்சிருப்போம். ஓஷோவோட குட்டிக்கதை செலக்டிவா ஒரு ஐந்து இருக்கு.அப்புறம் சுகி.சிவம் அவர்களின் ஆடியோ.இதையே ரிப்பீட்டு அடிச்சு அடிச்சு ரிவீட் அடிப்பாங்க
#எல்.கே.ஜி யில படிச்ச மிஸ்ஸிங் லெட்டர்ஸ்சை கண்டுபிடிக்கிறது,கஷ்டமான ஒரு கேள்விக்கு விடை சொல்லு என்று சொன்னதோடு மட்டுமில்லாம இதை ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டதாக டுமீல் விடுவாங்க.(அது எந்த வருசத்து கொஸ்டின் பேப்பர்னு சொல்லமாட்டாங்க..டேஞ்சரஸ் பெல்லோ)
#புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு,எய்ட்சுக்கு மருந்து ரெடி னு தட்டிவிடுறது.
புதிர் கணக்கு போட்டு கணக்கு படிக்காத ஆர்ட்ஸ் குரூப் பசங்களை கடுப்பேற்றுவது
#நெல்லிக்காயின் நற்குணம்,சீரகத்தின் அருமை,மஞ்சளின் மகிமை என மருத்துவர் சிவராமனாகவே மாறிடுவாங்க.மேலும் வாக்கிங் போகும்போது செய்ய வேண்டியது செய்ய கூடாதது (நாங்க உன்ன செஞ்சிடுவோம்) பதிவை போடுறது
#உங்களுக்குத் தெரியுமா னு ஒரு டைட்டில் (உனக்கு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தான் தெரியும் அட்மின்)
போட்டு பொது அறிவு தகவல்களை
அள்ளித்தெளித்து அணைக்கட்டுவது
#பிரபலங்களின் பிறந்தநாள் வந்தா போதும் அவங்க பிறந்தநாளை முன்னிட்டு ரிலையன்ஸ்,ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் இலவச நெட் 5MB, 7MB கொடுக்கிறாங்க.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதை பத்து குரூப்புக்கு அனுப்பவும்.நான் அனுப்பி எனக்கு வந்திருச்சி.நீங்களும் ஹாரி அப் னு விரட்டுவாங்க.உங்களையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.
#குரூப்பில் சில இயற்கை நேசர்கள்,இயற்கை சித்தர்கள் இருப்பார்கள்.இவர்கள் வேலையே காலை,மதியம்.,மாலை,இரவில் வணக்கம் சொல்வது.குழந்தை போட்டோ,இயற்கை என சகல ஜீவராசிகளின் பெயரால் வணக்கம் சொல்வது.எவரும் பதில் வணக்கம் சொல்லவில்லையெனில் அந்த புகைப்படத்திலேயே வணக்கத்தின் கீழேயே அவர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்
#தேசப்பற்று- இவுங்க தேசப்பற்று மட்டும் மற்றவருக்கு இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வீட்டோ பவர் வாங்கி விண்டோ சீட் ஐநாவில் கிடைச்சிருக்கிற ரேஞ்சுக்கு நம் ஜன கண மண தேசிய கீதம் யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வார்.போங்க தம்பி போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க
#ஹைதராபாத்தில ஒரு மாணவியின் சான்றிதழ் தொலைந்து,அச்சான்றிதழை மீட்டெடுத்த அந்த மாணவியே நன்றி சொன்னபிறகும் சான்றிதழ் தொலைந்ததாக பதிவிட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அறியாமையை என்ன சொல்வது.
இணையத்தில் ஃபைல்களை அனுப்ப,மேலாளருக்காக வடிவமைத்த படத்தை அனுப்பி ஒப்புதல் வாங்க மிகவும் பயனுள்ளது.புத்தகத்திற்கெனவும்,வாசித்ததை பகிரவும் ஆரம்பிக்கப்பட்டு உபயோகமுள்ள பல குழுக்கள் ஆரோக்யமாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.இரத்தம் கேட்டு வரும் தகவல்கள் பலரின் உயிரை காப்பாற்றியதில் வாட்ஸ் அப்புக்கு மிகப்பெரிய பங்குண்டு.
கடலூர்,சென்னை வாசிகள் தண்ணீரில் மிதந்தபோது துயர் துடைக்க நீண்டகரங்கள் கருணைமிக்கது.
இருப்பினும் இதுபோன்ற குப்பைகள் நாள்தோறும் பெருகி வருவதும் விசமத்தை வெளிப்படுத்தும் கருத்து வெளியிடுவதும் நல்லதல்ல.
இணையம் நல்லது.பயனுள்ளவற்றை பகிர்ந்தால்..
-தோழமையுடன் மணி
No comments:
Post a Comment