தமிழகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில்ைல. எனவே, சத்துணவு பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் சேர்த்து கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், பணிச்சுமையால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நிதி உதவி பள்ளிகளில் 42,423 சத்துணவு அமைப்பாளர்கள், 42,852 சமையலர் மற்றும் 42,855 சமையல் உதவியாளர் உள்பட மொத்தம் 1,28,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக, சத்துணவு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அரசு ஊழியர் சங்கங்களுடன் ஒருங்கிணைந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அவசர அவசரமாக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சுமார் 18 ஆயிரம் சத்துணவு பணியாளர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வரும் 24ம் தேதி உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
வரும் டிசம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவிடும். எனவே, அதற்கு முன்பாக, தற்போதுள்ள காலிப்பணியிடங்களை ஓரளவு நிரப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment