ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகளை எளிமைப்படுத்துவதற்காக, சென்னை மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக, செப்., 1 முதல், 30 வரை, வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இரண்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டதால், ஒரு மாதத்தில், 21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றை சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தரப்பட்டு உள்ளது. அவர்கள், உரிய அலுவலகங்களுக்கு சென்று, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். பின், ஓட்டுச்சாவடி பகுதி களில் உள்ள, விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கள ஆய்வு செய்து தகவல் அனுப்ப வேண்டும்.
இதற்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு, பல முறை அலைய நேரிடும். இதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், 'புதிய ஆப்' ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு செய்து, தகவல் உண்மையா; தவறானதா என, மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.வாக்காளர் விண்ணப்ப படிவத்தில், திருத்தம் செய்ய விரும்பினால், அதையும் ஓட்டுச்சாவடி அலுவலரின், மொபைல் ஆப் வழியே செய்யலாம்.
சோதனை ரீதியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 2,750 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இந்த வசதி ஏற் படுத்தி தரப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில், மொபைல் போனில் பதிவுசெய்து, இணைப்பு கிடைக்கும் பகுதிக்கு வந்ததும் அனுப்பலாம். இத்திட்டம் படிப்படியாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்
No comments:
Post a Comment