அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தின் அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், ஓய்வூதிய ஆணையத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.6) ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தும் அம்சங்கள் குறித்து ஆராய, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வூதிய ஆணையம்: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் சங்கங்களின் கருத்துகளை இந்தக் குழு கேட்டறிந்துள்ளது.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவுகளை எடுக்கும் முன்பாக தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டுமென தமிழக அரசிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த ஆணையத்தின் அதிகாரிகள் குழுவினரை, தமிழக அரசின் நிபுணர் குழுவானது வியாழக்கிழமை மாலை சந்திக்கிறது.
கோரிக்கை என்ன: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை -மேம்பாட்டு ஆணையமானது, இப்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என தமிழக அரசிடம் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளது. இதே கருத்தை வியாழக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் ஒழுங்கு முறை ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம் தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைச் செயல்படுத்துவதுடன், கண்காணிக்கும் பணியையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை -மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment