சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
இதில், இளங்கலை பட்டப்படிப்புக்கு மட்டும், ஒரு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது; முதுகலை படிப்புக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக, சிறப்பு ஆசிரியர்கள் பல மனுக்கள் அனுப்பியும், கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகியும், வேலுார் மாவட்ட, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான கமலக்கண்ணன், ஊக்க ஊதியம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊக்க ஊதியம் அளிக்க முடிவு எடுத்தால், கடந்த கால பாக்கியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment