தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார். சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டி பேசுகையில், ""பி.எட். படிப்பை பொறியியல் முடித்தவர்களும் படிக்கலாம் என இம்முறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், பி.இ. முடிப்பவர்கள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேரமுடியுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது'' என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியது: ஆசிரியர் கல்வியியல் (பி.எட், எம்.எட்.) படிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வகுத்து அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பொறியியல் படிப்பில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே பி.எட். படிப்பில் சேர அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நிகழாண்டு முதல்தான் நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அவர்கள் சேர்ந்து, படித்து முடிக்கின்றபோது பள்ளிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment