பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கு உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இப்போது சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையத்துக்கு நேரில் சென்று செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். அதேபோல், பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தலா 2 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment