தமிழகத்தில் கடந்த 2009-10-ஆம் ஆண்டைக் காட்டிலும், இப்போது அன்னிய நேரடி முதலீடுகளின் அளவுகள் அதிகரித்திருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த முதலீடுகளின் அளவு படிப்படியாக உயர்ந்து இப்போது 3.8 சதவீதம் என்ற நல்லதொரு நிலையை எட்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, இந்த அன்னிய நேரடி முதலீட்டின் அளவு மேலும் உயரும் என அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். தமிழகத்தில் முதலீடுகளின் அளவுகள் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கின. "ஃபோர்டு', "நிசான்', "செயின்ட் கோபைன்' எனப் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய-விரிவுபடுத்தப்பட்ட ஆலைகளைத் துவக்கின.
2006-ஆம் ஆண்டு முதல் குறிப்பாக 2009-10-ஆம் ஆண்டு காலகட்டங்களில் முதலீடுகளின் அளவு, குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு வெகுவாகக் குறைந்தன. குறிப்பாக 2009-10 ஆம் நிதியாண்டில் 0.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2012-13-ஆம் நிதியாண்டில், 1.4 சதவீதமாக இருந்த முதலீட்டின் அளவு அடுத்தடுத்த நிதியாண்டுகளில் உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் (2014-15) முதலீடுகள் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர். ஹூண்டாய் மோட்டார் துணைத் தலைவர் பி.சி.தத்தா:
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளன. அந்தக் கார்களுக்கு பல்வேறு மதிப்புமிக்க நாடுகளில் இருந்து விருதுகள் கிடைத்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. கார் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கு கடந்த 1995-ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக ஆட்சியில் முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினோம். இருங்காட்டுக் கோட்டையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி தொடங்கியது. இரண்டு ஆலைகள் மூலமாக, இப்போது ஆண்டுக்கு 6.30 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன்:
சென்னையில் காக்னிசன்ட் நிறுவனத்தைத் தொடங்க, கடந்த 1994-ல் முடிவு செய்தோம். இதற்கு மிக முக்கியக் காரணம், தமிழகத்தில் சிறப்பான கல்வியும், அதிக திறன்களைக் கொண்ட மென்பொருள் வல்லுநர்கள் இருப்பதும்தான். மேலும், மாநிலத்தில் அப்போது முதலீட்டுக்கு ஏற்ற சூழலும், தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் இருந்து கிடைத்த அளப்பரிய ஆதரவும் எங்களை பெரிதும் ஈர்த்தது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நிறுவனங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். மாநிலத்தில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறோம். எச்.எல்.எல். ஃலைப் கேர் இயக்குநர் பாபு தாமஸ்: சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், மருத்துவத் துறை சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தமிழகத்தை குறிப்பாக சென்னையைத் தேர்ந்தெடுத்தோம்.
இங்கு துறைமுகம், சாலை உள்கட்டமைப்பு, மிகச்சிறந்த-தேர்ந்த மனித வளங்கள், திறன்மிக்க பணியாளர்கள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இந்த மருத்துவத் துறை சார்ந்த பூங்காவை செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் அமைத்துள்ளோம். இதன் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, தமிழகத்தில் தொழிலுக்கு ஏற்ற சூழல்கள் குறித்து பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரிக்கும்: தமிழகத்தில் ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகின. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் (செப்டம்பர் 9) மூலமாக மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாநாட்டின் இலக்கான ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்பதைத் தாண்டி இப்போது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் வரக்கூடும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தமிழகத்தின் தட்பவெப்ப சூழல், முதலீட்டுக்கான வாய்ப்புகள் மாநாட்டின் மூலமாக அறிந்த பிறகு மேலும் அதிகளவு முதலீடுகள் வரலாம் என்றும் தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment