இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கான -பொன்மகன் வைப்பு நிதி- திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்படுவதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் "செல்வமகள் சேமிப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை முன்னிட்டு, ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன்மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இந்திய அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்படும் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 10.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்புத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது, ஆண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆகையால், இதைக் கருத்தில் கொண்டு குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையில், "பொன்மகன் பொது வைப்பு நிதி' என்ற பொது வைப்பு நிதி திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் தொகைக்கு "80-சி' பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பத்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு, பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.
பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களாகவே கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கு தொடங்குவதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது. தற்போதைய நிதியாண்டில் இந்தக் கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதே நேரத்தில், இந்தக் கணக்கின் வாயிலாகக் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கும் உண்டு. "பி' பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் நிலையங்களும், இந்தக் கணக்குக்கான முன் தொகையை ஏற்றுக் கொள்ளும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.100-ம், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலும், முன் பணமாகச் செலுத்தலாம். இதில் கடன் வசதி, செலுத்திய தொகையைத் திரும்பப்பெறும் வசதிகளும் உண்டு. அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெறும்.
திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment