குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதி, பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரும், மாணாக்கர்களும் வாழ்வின் உன்னத நிலை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்.
எனவே, அவரது நினைவைப் போற்றும்விதமாக அப்துல் கலாம் பிறந்த தினமான அக். 15ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் வரும் அக். 15ஆம் தேதி கலாமின் சாதனைகள் குறித்து விளக்கவும், இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் ஆராய்ச்சிகள், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தவும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து தெளிவுபடுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment