Click below
Friday, July 31, 2015
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இதையடுத்து, இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 21 வரை செல்லத்தக்கது. எனினும், மாணவர் நலன் கருதி மூல மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 10 மணி முதல் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அரசு வேலைகோரி தங்களது படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாத நிலவரப்படி அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. அதில், பெண்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆக இருக்கிறது.
சிறப்புப் பிரிவின் கீழ் இலங்கை வாழ் மாணவர்கள் 934 பேரும், கலப்புத் திருமணம் செய்தவர்களில் 39 ஆயிரத்து 721 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 719 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். வகுப்பு வாரியாக தகவல் வெளியீடு: வேலைவாய்ப்பு கோரி, பதிவு செய்தவர்களில் வகுப்பு வாரியாகவும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை குறைந்தது
கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு மாணவர்களை கணக்கெடுக்க உத்தரவு
சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் (பருவம் வாரியாக) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பள்ளிகள் துவங்கும் நாளில் இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டும் துவக்க நாளில் வழங்கப்பட்டன.
மாணவர் நலத்திட்டங்கள் குறித்து துறைச்செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் ஜூலை 29ல் நடந்தது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் குறித்த ஆய்வில் திருவள்ளூர், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை விட வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. சில தென்மாவட்டங்களில் வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அறிய வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்களை கணக்கெடுக்கவும், அவற்றை மாவட்ட கல்வி அலுவலர்கள் நாளை (ஆக., 2) இயக்குனர் அலுவலகத்தில் தாக்கல் செய்யவும் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள் துவங்கும் போது மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க கூறுகின்றனர். முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட மொத்த நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கையில் இருந்து 5 சதவீதம் அதிகரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புத்தகம், நோட்டுக்கள் வழங்கப்பட்டன. சில மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தும், சில மாவட்டங்களில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்ததாலும் இக்குழப்பம் எற்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்தில் சரியான எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்பதால் மாணவர் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது என்றனர்
ஆசிரியர்களுக்கு அரசு மிரட்டல்
'ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்து பங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் துவக்கி வைக்க, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் முடித்து வைக்கிறார். முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 'ஜியோ' அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று வேலை நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர்கள் யாரும், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 'பள்ளி வேலை நாளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்கமும் வலியுறுத்தி உள்ளது. அச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறும் போது, ''இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி, கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். போராட்டத்தால், மாணவர்களின் கல்விப் பணி பாதிக்கும்,'' என்றார்
Thursday, July 30, 2015
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளை போல் இந்தாண்டும் கலந்தாய்வு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பும், போராட்டங்களும் நடத்தின. இந்நிலையில், இந்தாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளை ஜூலை 14ல் கல்வித்துறை வெளியிட்டது.
இதில், குறைந்தது ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியோருக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்விற்கு முன் நிர்வாக அடிப்படையில் துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி முதலில் நிர்வாக மாறுதலை மேற்கொள்ளலாம் உட்பட சில நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் புதிய நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கலந்தாய்வில் பங்கேற்க 'ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற நிபந்தனையை தளர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள் எதிர்க்கும் சில நிபந்தனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முடிவில் 'மூன்று ஆண்டுகள்' என்பதை 'ஓராண்டு' என குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு இரண்டு நாளில் வெளியாகும். ஜூலை 31 முதல் ஆக.7 வரை கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெற வலியுறுத்தினர். ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வு 'ஆன் - லைன்' அனுமதி சீட்டு
புதிய 1 ரூபாய் நோட்டு அச்சடிக்க திட்டம்
Wednesday, July 29, 2015
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது. இதை பெறு வதற்கு, புதிய இணையதள முகவரியான www.scholarships.gov.in என்ற முகவரியில், புதிதாக உதவி தொகைபெறும் நபர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரையிலும் ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறும் நபர்கள் புதுப்பிப்பதற்கு நவம்பர் மாதம் 15-ம் தேதி வரையிலும் பதிவு செய்யலாம்.
மேலும், 2015-16ம் ஆண்டில் 2,279 நபர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க அரசு இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற மாண வர்கள், கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்கள், மேற்கூறிய இணையதள முகவரி யில் விண்ணப்பத்ததைப் பதிவி றக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், மத சான்றிதழ், வருமானச் சான்று, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, மேற்கூறிய நாட்களுக்குள் மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவ- மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, முழுக்கல்வி கட்டணங்களும் (திரும்ப பெறும் கட்டணங்களைத் தவிர்த்து) வழங்கப்படும்.
செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு செப்., 20 ல் நடக்கிறது. ஆறு முதல் 9 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான 2 ம் தாள் காலை 9:30 முதல் பகல் 12 மணி வரையும், ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான முதள் தாள் பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் நடக்கிறது. முதள் தாள் எழுத பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப்பெண்களும், 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய படிப்பும் முடித்திருக்க வேண்டும்.இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், பி.எட்., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத தேர்வு கட்டணம் ரூ.600 ம், இரண்டு தாள்களையும் சேர்த்து எழுத ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.300, இரண்டு தாள்களையும் எழுத ரூ.500 செலுத்த வேண்டும்.இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 30 முதல் ஆக., 19 வரை சமர்ப்பிக்கலாம். 'இ' சலானை ஆக., 20 வரை செலுத்தலாம். விண்ணப்ப திருத்தங்களை ஆக., 21 முதல் ஆக., 25 வரை செய்யலாம். செப்., 4 ல் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என்றார்.
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில், சி.சி.இ., என்ற செயல்முறை வழி கற்றல் அமல்படுத்தப்படுகிறது.
அதேநேரம், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வரையிலான மாணவர்களுக்கு, சிறப்புப் பாடங்களும் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கைவினை போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இதற்காக, 22 ஆயிரம் ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் சரியாக வழங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் காணாமல் போனதாகவும், தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம் புகார் அளித்தது. இந்தப் புகாரை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி, புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைத்துள்ளது.
இதில், ஒவ்வொரு பாடவாரியாகவும் கவின் கலைக்கல்லுாரி பேராசிரியர், கலை ஆசிரியர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினரின் பாடத்திட்ட தயாரிப்புப் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில், இணை இயக்குனர் குப்புசாமி மேற்பார்வையில் பாடத்திட்ட தயாரிப்பு நடக்கிறது.புதிய பாடத்திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாகவும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையிலும், காலத்துக்கு ஏற்ற பல புதுமைகளுடன், சிறப்புப் பாட வழிகாட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
அடுத்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை பெறும் போது, அத்துடன் அந்த மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு அடுத்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை அதற்கு முன்னதாக உறுதி மொழி படிவத்தில் அரசு தேர்வுத்துறை பெறுவது வழக்கம். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பெற்று, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்ராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,
“பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அந்த மாணவரின் முழு பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பெற்றோர் மற்றும் காப்பாளர் விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் உறுதி மொழி படிவத்தில் தேர்வு எழுதும் மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவனுக்கு ஆதார் எண் இல்லை என்றால் அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை கட்டாயம் உறுதி மொழிபடிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இறுதியாக மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் அந்த உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து பெற வேண்டும்.
உறுதி மொழி படிவத்தில் உள்ள விபரங்களை வகுப்பு ஆசிரியர்கள் ஒரு முறைக்கு, இரு முறை சரிப்பார்த்து கையெழுத்திட வேண்டும். இவற்றை பள்ளி தலைமையாசிரியர் சரிப்பார்த்து இறுதியில் கையெழுத்திட்டு அரசு தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றில் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” கூறப்பட்டுள்ளது.
Tuesday, July 28, 2015
உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வுபெற்று செல்பவர்கள் வேறு பணியில் சேர்ந்தால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலிசபெத் ராஜாராம் (54). மகப்பேறு மருத்துவ நிபுணரான இவர், உடல்நலம் சரியில்லை என்று கூறி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து சுகாதாரத்துறைச் செயலர் 8.6.2015ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எலிசபெத் ராஜாராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் மருத்துவப் பணி முக்கியமானது. அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் அவர் இதுவரை அரசின் சலுகையை அனுபவித்துவிட்டு தற்போது விருப்ப ஓய்வு கேட்பதை ஏற்க முடியாது என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தான் சிகிச்சை அளித்தால் நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவம் மேற்கொள்ளக்கூடிய தைரியமும், நம்பிக்கையும் இல்லை. அப்படியிருக்கும் சூழலில் பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்துவது தேவையற்றது. மனுதாரர் தான் உடல்ரீதியில் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கும்போது, அவரிடம் எப்படி சிகிச்சைக்கு வருவார்கள். அவர் சிறப் பாக பணிபுரிவார் என்பது கேள்விக் குறியாக இருக்கும்போது, அவரை தொடர்ந்து பணிபுரிய கட்டாயப் படுத்துவது தேவையற்றது. அவரைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தால் அவருக்கும், மருத்துவமனைக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஒரு மருத்துவர் தன்னால் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லும்போது அவரிடம் அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை சிகிச்சைக்கு அனுப்புவார்களா? அவரை பணியில் இருக்கச் சொல்வதற்கு பதில், அவருக்கு தகுதியான ஒரு மருத்துவரை நியமனம் செய்யலாம். மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு தரக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. அதே அரசாணையில் உடல்நல பாதிப்பைக் கூறி விருப்ப ஓய்வு கேட்டால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டுமா என்பது சொல்லப்படவில்லை. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் தலையிட முடியும். அதன் அடிப்படையில் மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. மனுதாரருக்கு விருப்ப ஓய்வு மறுத்து 8.6.2015-ல் சுகாதாரத்துறைச் செயலர் பிறப் பித்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மருத்துவர்கள் சிலர் துறைரீதியான நடவடிக்கையை சந்திக்க பயந்து உடல் நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வில் செல்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். அப்படி விருப்ப ஓய்வில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது.
விருப்ப ஓய்வுக்கு பிறகு மனுதாரர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது. அப்படி வேறு மருத்துவமனையில் சேர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
குரூப் 2 கீ ஆன்சர் வெளியீடு
சுமார் 4.78 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 பதவியில் அடங்கிய 18 வகையான பதவிகளில் 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www,tnpscexams.netல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் ஒரு வாரத்தில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பொதுவாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றால் கீ ஆன்சர் ஒரு வாரத்தில் வெளியிடுவது வழக்கம்.
ஆனால், தேர்வு நடைபெற்ற இரண்டே நாளில் கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.